திரை அவதாரங்கள் உருவாக்கும் மாயை!


அண்மையில் இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒன்று ‘பைரவா’, மெரினாவில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தின்போது வெளியானது. இன்னொன்று ‘சி 3’. அதற்கு மூன்று வாரங்கள் கழித்து வெளியானது. இரண்டுமே நம் சமூகத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பெரும் குற்றச் செயல்களை மையமாகக் கொண்டவை. ‘பைரவா’ படம் கல்விக் கொள்ளையை மையப்படுத்தியது. ‘சி 3’, இந்தியாவை வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றும் சர்வதேசச் சதி பற்றியது.
அவதார மகிமை
இவ்வளவு முக்கியமான பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட இந்தப் படங்கள் இவற்றுக்கு என்ன தீர்வை முன்வைத்தன? கிட்டத்தட்ட சூப்பர்மேன் அல்லது தெய்வீக அவதாரத்துக்கு இணையான ஒரு தனி மனிதனின் முயற்சியால் இந்தக் கேடுகள் முறியடிக்கப்படுகின்றன. இவர்களுக்குப் பிறரது உதவிகளும் கிடைக்கின்றன என்றாலும் மிகுதியும் ‘அவதார மகிமை’தான் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கிறது.
சமூகத்தின் நிஜமான பிரச்சினைகளைக் கையாள்வது வணிகப் படங்களுக்குப் புதிதல்ல. பல்வேறு முக்கியமான, யதார்த்தமான பிரச்சினைகளை வணிகப் படங்கள் கையாண்டுதான் வருகின்றன. ஆனால், அவை தரும் தீர்வுக்கும் நடைமுறைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. ‘இந்தியன்’, ‘முதல்வன்’ முதலான ‘நேர்த்தி’யான படங்கள் தொடங்கி, ‘திருப்பாச்சி’ போன்ற அப்பட்டமான மசாலாக்கள் வரை பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
வலுவான வலைப்பின்னல்
பெரிய அளவிலான குற்ற நடவடிக்கை என்பது பல்வேறு வலுவான கண்ணிகளால் வலுவாகக் கட்டமைக்கப்பட்ட இறுக்கமான அமைப்பு. அரசியல்வாதிகள், ஆளுங்கட்சி, அதிகாரவர்க்கம், காவல் துறை, பெருநிறுவனங்கள், ரவுடிகள் முதலான பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடுதான் இந்த அமைப்பு இயங்குகிறது. நீதித்துறையிலும் சட்டமியற்றும் மன்றங்களிலும்கூட இதன் கரங்கள் பரவியுள்ளன.
நிழலான பேரங்கள், சட்ட விரோத வர்த்தகம், கடத்தல் எனப் பல விதங்களில் இதன் செயல்பாடுகள் விரிகின்றன. ஒற்றை நபரை நம்பியோ மையம் கொண்டோ இவை இயங்குவதில்லை. இவற்றை எதிர்கொள்வதென்பது பல்வேறு கிளைகளில் விரியும் வலுவான அமைப்பொன்றின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் மட்டுமே சாத்தியம். ஆயிரம் கரங்கள் கொண்ட இந்த ராட்சத ஆக்டோபஸ்ஸை ஒற்றை நபரின் அல்லது ஒரு சில நபர்களின் வில்லத்தனமாகச் சுருக்குவது நமது வணிகத் திரைப்படங்களின் வழக்கம். அப்படிச் சுருக்கப்பட்ட தீமையை எதிர்த்துப் போரிட்டு வெல்வது நமது அவதார புருஷர்களின் கடமை.
ஒப்பீட்டளவில்…
இயக்குநர் ஷங்கரின் ‘சமூகப் பார்வை’ வெளிப்படும் படங்கள், கண்கவர் காட்சிகளையும் செவிக்கினிய இசையையும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் நகைச்சுவையையும் பாலியல் சார் வசீகரத்தையும் ஒருங்கே கொண்டவை. இந்தப் பளபளப்பான திரைக்குப் பின்னால் தீமையின் உருவகமாக ஒருவர் இருப்பதையும் அவரை முறியடிக்க நன்மையின் உருவகமாக ஒருவர் இருப்பதையும் காணலாம். ‘முதல்வன்’, ‘சிவாஜி’ ஆகிய படங்கள் இதற்கு உதாரணம். ‘இந்தியன்’, ‘அந்நியன்’ போன்ற படங்களில் தீமை பல வடிவங்கள் எடுத்தாலும் நன்மை என்பது எப்போதும் ஒற்றை நாயகனின் வடிவிலேயே தரிசனம் தருகிறது.
தேர்ந்த தொழில்நுட்பம், அசரவைக்கும் காட்சிகள், நேர்த்தியான படமாக்கல், சிறந்த நட்சத்திரங்கள், அழுத்தமான வசனங்கள், சிறப்பான இசை ஆகியவற்றின் மூலம் ஷங்கர் போன்றவர்கள் முன்வைக்கும் இதே எளிமையான சூத்திரத்தைப் பேரரசு, போன்றவர்கள் ஒப்பீட்டளவில் கச்சாத்தன்மையுடன் முன்வைக்கிறார்கள். ஹரி போன்றவர்கள் இவை இரண்டுக்கும் நடுவில் இருந்தாலும் அடிப்படையில் இவர்கள் அனைவரும் செய்வது ஒன்றே.
யதார்த்தம் தரும் பாடம்
அண்மையில் மெரினாவில் நடைபெற்ற போராட்டம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதி என்னும் தன் இலக்கை அடைந்தது. இளைஞர்கள் பெருமளவில் தன்னெழுச்சியாகக் கூடி வன்முறை தவிர்த்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தனி நாயகன் யாரும் இல்லை. தலைவன்கூட இல்லை. எனினும் இந்த எழுச்சியை உலகமே பிரமிப்புடன் பார்த்தது. அரசியல்வாதிகள் அடங்கி நின்றார்கள். நடிகர்கள் வலிய வந்து ஆதரவு தெரிவித்தார்கள். அரசுகள் பணிந்தன.
நீதிமன்றம் அவர்கள் குரலுக்குச் செவிசாய்த்தது. யாருடைய புஜபலமும் இதைச் சாதிக்கவில்லை. ஒண்டி ஆளாக நூறு பேரை அடித்துப் போட்டுச் சாதித்த வெற்றி அல்ல இது. அப்படியெல்லாம் எந்த வெற்றியும் எப்போதும் கிடைக்காது என்பதை உரக்கச் சொன்ன வரலாற்று நிகழ்வு இது. இந்த நிகழ்வில் நம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆகியவற்றுக்கு மட்டுமல்ல. திரைத் துறையினருக்கும் பாடம் இருக்கிறது.
தனித்துத் தெரிந்த ‘தனி ஒருவன்’
நாயக பிம்பங்களைத் திரைப்படங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவற்றைச் சற்றேனும் நிஜத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவரலாம். முழுக்க முழுக்கப் பொய்யான தீர்வுகளை முன்வைப்பது, பிரச்சினைகளுக்கு உண்மையில் தீர்வே கிடையாது என்னும் செய்தியையே முன்வைக்கிறது.
மெய்யான சிக்கல்களுக்கு மிகையான நாயகர்களின் மூலம் பொய்யான தீர்வு என்னும் பொதுப் போக்கிலிருந்து விலகும் படங்களும் வரத்தான் செய்கின்றன. கடந்த ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ அதற்கொரு உதாரணம். சகல ஆற்றல்களும் சத்தான தொடர்புகளும் கொண்ட வில்லனின் சாம்ராஜ்யத்தை புஜபலம் கொண்டு நாயகன் சாய்க்கவில்லை. காவல் துறையின் வலிமை, அதன் அதிகாரம், தேர்ந்த புலனாய்வு, வியூகம், அறிவார்த்தமான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாயகன் வெல்கிறான்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ திரைப்படமும் ஒரு விதத்தில் விதிவிலக்குதான். மக்கள் போராட்டத்தை வலுவான தீர்வாக இப்படம் முன்வைத்தது. ஒரு கிராமத்தின் தண்ணீர் நெருக்கடிக்குக் காரணமாகப் பெருநிறுவன வணிக அரசியல் இருக்கிறது. வலிமை வாய்ந்த இந்த எதிரியை மக்களை ஒன்று திரட்டிப் போராடுவதன் மூலம் நாயகன் வெற்றிகரமாக எதிர்கொள்கிறான். உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடித்த படத்தில் இப்படி ஒரு காட்சியமைப்பு இடம்பெற்றது வியப்பளிக்கக்கூடியது.
இந்தப் படத்திலும் கடைசியில் கிட்டத்தட்ட நூறு பேரை வெட்டிச் சாய்த்து தீமையின் ஒற்றைமுகமாக இருக்கும் வில்லனை வீழ்த்தி, நாயக பிம்பத்தைக் காப்பாற்றும் காட்சி இருந்தது. என்றாலும் மக்கள் போராட்டத்தின் மூலம் மாற்றம் சாத்தியம் என்பதை வலுவாகவே சொல்லியிருந்த விதத்தில் இந்தப் படம் பொதுப் போக்கிலிருந்து விலகியிருந்தது.
சந்தை மதிப்பும் சாகச வளர்ச்சியும்
நாயக நடிகர்களின் நட்சத்திர மதிப்பு வளரவளர அவர்களுடைய சாகசங்களும் சாதனைகளும் யதார்த்தத்தை விட்டு விலகிச் செல்கின்றன. நட்சத்திர மதிப்பு என்பதே திரைப்படங்களிலிருந்து யதார்த்தத்தை விலக்கச்செய்வதாக இருக்கிறது என்றுகூட இதை விளங்கிக்கொள்ளலாம். நட்சத்திர மதிப்பைக் குறைப்பது இதற்குத் தீர்வாக இருக்க முடியாது. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதத்தை உண்மைக்கு நெருக்கமானதாக அமைப்பதற்கான மெனெக்கெடல்தான் இதற்குத் தீர்வு.
அதற்குக் கூடுதலான உழைப்பும் படைப்பூக்கமும் திரைக்கதை நேர்த்தியும் தேவை. இப்படியெல்லாம் கஷ்டப்படுவதைக் காட்டிலும் நாயகனை அவதாரமாக மாற்றிவிடுவது எளிது என்றே பல இயக்குநர்கள் நினைக்கக்கூடும். எளிமையான இந்த அணுகுமுறையின் மூலம் அவர்கள் திரைப்படம் என்னும் அற்புதமான ஊடகத்தை மட்டும் மலினப்படுத்தவில்லை; பற்றி எரியும் பிரச்சினைகளுக்கான நடைமுறை சாத்தியமான தீர்வுக்கான சிந்தனைகளையும் கனவுகளையும் அவர்கள் சிதற அடிக்கிறார்கள்.
திரையுலக ஆளுமைகள் பொதுப் பிரச்சினையில் கருத்துச் சொல்வதைவிடவும் தமது ஊடகத்தைப் பொறுப்புடன் கையாள்வதே அவர்களுடைய பிரதானக் கடமை. பொய்யான அவதாரங்களுக்குப் பதில் உண்மையான மனிதர்களை வைத்துப் படமெடுப்பதன் மூலம் இந்தக் கடமையைச் செவ்வனே ஆற்றலாம்.0 comments:

http://go.ad2up.com/afu.php?id=1018707